தமிழர் தெருவிழா 2025 தமிழராகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடுவோம்.

1 ஆகஸ்ட் 2025

தமிழர் தெருவிழா 2025 தமிழராகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடுவோம்!

கனடியத் தமிழர்களாக நாங்கள் மிக பெருமையாகவும் சிறப்பாகவும் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடும் தமிழர் தெருவிழா உலகின் மிகப்பெரிய தமிழர் திருவிழாவாக ஒரு தசாப்த காலத்திற்குள் வளர்ந்திருக்கின்றது. பல்லின மக்களுடன் வாழும் கனடிய தேசத்தில், தமிழர்களின் மொழி, கலை, பண்பாடு, வரலாறு, உணவுகள் மற்றும் அடையாளங்களை வெளிக்கொண்டுவரும் ஒரு மிகப் பெரும் தளமாக திகழ்கின்ற தமிழர் தெருவிழா இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23 ஆம் 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

டொரோண்டோ மாநகரின் மிகப்பிரதான வீதிகளில் ஒன்றான மார்க்கம் சாலையில் இரண்டு நாட்களுக்கு மிக சிறப்பாக நடைபெறுகின்ற தமிழர் திருவிழாவிற்கு ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகைதருவதுண்டு. பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்குபற்றலுடன் சிறப்பாக நடக்கும் தமிழர் தெருவிழா மூலம் நமது தமிழ் வணிகர்கள், சேவை வழங்குநர்கள், இலாப நோக்கற்ற நிறுவனங்கள் என பலரும் நன்மையடைந்துள்ளனர். இன்று பிரபலமாக இருக்கின்ற கனடிய தமிழ் கலைஞர்கள் பலருக்கு தமிழர் தெருவிழா வாய்ப்புக்களை வழங்கி ஊக்குவித்து வந்துள்ளது.

தமிழர் தெருவிழா என்பது ஒரு இலாப நோக்கற்ற, தமிழர்களாக நமது அடையாளங்களை பெருமையுடன் கொண்டாடும் ஒரு தெருத்திருவிழா ஆகும். ஆனால், கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழர் தெருவிழாவின்போது புறக்கணிப்பு முயற்சிகள் இடம்பெற்றிருந்தது கவலைக்குரியதாகும்.
சென்ற ஆண்டில் நடந்த குழப்பங்களை ஆக்கபூர்வமாக கையாண்டு எமக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளிற்கான ஒரு தீர்வை பெற்று இவ்வாண்டு தமிழர் தெருவிழாவை அமைதியுடனும், ஒற்றுமையுடனும் நடாத்தும் நோக்கில், கடந்த ஆண்டு புறக்கணிப்பை பகிரங்கமாக கோரிய தமிழர் தேசிய மக்கள் அவையுடனும் (National Council of Canadian Tamils) கனடிய தமிழர் கூட்டு (Canadian Tamil collective) பிரதிநிதிகளுடனும் தனித்தனியாக கனடிய தமிழர் பேரவை நேரடி சந்திப்புகளையும், பேச்சுவார்த்தைகளையும் நடத்தியிருந்தது.

அந்தவகையில் கனடிய தமிழர் தேசிய அவை (NCCT – National Council of Canadian Tamils) பிரதிநிதிகள் திருவாளர்கள் மோகன் இராமகிருஸ்ணன், தேவா சபாபதி, ரொனால்ட் ஜெயரட்ணம், மேல்வின் மரியதாஸ் ஆகியோருடன் கடந்த ஞாயிறுக்கிழமை அன்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்தது. இதில் கனடிய தமிழர் பேரவை சார்பாக கனடிய தமிழர் பேரவையின் தலைவர் குமார் ரத்னம், கனடிய தமிழர் பேரவையின் இயக்குனர்சபை உறுப்பினர் ரவி ஆத்மன், ஆலோசனைக்குழு உறுப்பினர் சிவன் இளங்கோ மற்றும் நிர்வாக இயக்குனர் டன்ரன் துரைராஜா ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

அதுமட்டும் அல்லாது கனடிய தமிழர் பேரவை மீது வைக்கப்பட்டுள்ள விமர்சனங்களுக்காக நாங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகளையும் நடவடிக்கைகளையும் விளக்கியிருந்தோம். அந்த வகையில் உலகத்தமிழர் பேரவையின் அங்கத்துவத்தில் இருந்து கனடிய தமிழர் பேரவை முழுமையாக விலகிவிட்டதையும், இமாலய பிரகடனத்தை கையளிக்கும்போது உலகத்தமிழர் பேரவை அங்கத்தவர்களுடன் கனடிய தமிழர் பேரவையின் ஆலோசகர் ராஜபக்க்ஷவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்துக்காக பலதடவைகள் பகிரங்கமாக மன்னிப்புகள் கூறியிருந்ததையும், இந்த புகைப்படத்தில் இருந்த ராஜ் தாவரட்ணசிங்கம் குறித்த செயற்பாட்டிற்கு பொறுப்புக்கூறும் விதமாக தனது ஆலோசகர் பதவியில் இருந்தும், கனடிய தமிழர் பேரவையின் அங்கத்துவத்தில் இருந்தும் விலகிக்கொண்டார் என்பதையும் விளக்கியிருந்தோம். அதனுடன் அவ்வாறான தவறுகள் இனியும் நடக்காமல் இருப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் என்பதையும் அவர்களது கருத்துக்களையும் உள்வாங்கி தொடர்ச்சியான உரையாடல்களை மேற்கொண்டு புரிந்துணர்வுடன் பயணிக்க முடியும் என்ற எண்ணத்தை முன்வைத்திருந்தோம்.

அதேபோல கனடிய தமிழர் கூட்டு (Canadian Tamil collective) பிரதிநிதிகள் திருவாளர்கள் அபி சிங்கம், மரியோ புஸ்பரட்ணம், அமல்ராஜ் யோசப், நிருஜன் குணாளன், தீபன் ராஜ் ஆகியோருடனும் பல வாரங்களாக நேரடி சந்திப்புகள் மூலமாகவும், இணையவழி தொடர்பாடல்கள் மூலமாகவும் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தோம். இதில் கனடிய தமிழர் பேரவையின் இயக்குனர் சபையில் இருந்து தலைவர் குமார் ரத்னம், இயக்குனர்சபை உறுப்பினர்கள் ரவி ஆத்மன், டில்ஷான் நவரத்னராஜா, ஆலோசகர் சபை உறுப்பினர் சிவன் இளங்கோ மற்றும் நிர்வாக இயக்குனர் டன்ரன் துரைராஜா ஆகியோர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பேச்சுவார்த்தைகைய மேற்கொண்டிருந்தனர். இதன்போது பல சுற்று பேச்சுவார்த்தைகளில் பல இணக்கப்பாடுகள் எட்பட்டிருந்தது. அதனடிப்படையில் எங்கள் சமூகத்தில் தெளிவும் நம்பிக்கையும் நிலைநிறுத்தப்படுவதற்காக, ஒரு சுயாதீன பரிசீலனைக் குழுவை உருவாக்கி அதில் அவர்களின் பிரதிநிதித்துவமும் உள்வாங்கப்படும் என்ற இணக்கப்பாடும் எட்டப்பட்டிருந்தது. இந்தக்குழு கனடிய தமிழர் பேரவையின் யாப்பு, வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், உறுப்புரிமை என்பனவற்றின் மறுசீரமைப்புக்கான பரிந்துரைகளை ஆறு மாத காலத்திற்குள் பரிந்துரைக்கும் எனவும் அந்த பரிந்துரைகளை கவனத்தில் கொண்டு உரிய மாற்றங்களை கனேடியத் தமிழர் பேரவை மேற்கொள்ளும் என்றும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. மக்களின் உணர்வுகளுகளுக்கு மதிப்பளிப்பதற்கும் அவர்களின் கரிசனைகளை உள்வாங்கி செயல்ப்படுவதற்கும் கனேடியத் தமிழர் பேரவை பற்றுதிகொண்டுள்ளது.

கனடிய தமிழர் பேரவை இந்த இரு அமைப்புக்களுடனும் தொடர்ந்தும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளை உள்வாங்கி செயற்படுத்தவும், ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொள்ளவும் தயாராகவே உள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம். அதுமட்டும் அல்லாது கனடிய தமிழர் பேரவையின் வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்க 2025 ஆம் ஆண்டு முதல் கனடிய தமிழர் பேரவையின் கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிதி அறிக்கையை பொதுவெளியில் வெளியிடவும் தீர்மானித்துள்ளோம். நாங்கள் இணங்கியிருந்த சுயாதீன குழுவை அமைத்து அந்தக்குழு தனது பணிகளை ஆரம்பிக்கவுள்ளது என்பதையும் அறியத்தருகின்றோம்.

2015 இல் தமிழர் தெருவிழா ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இந்த தெருத்திருவிழா கனடிய தேசத்தில் உள்ள ஒவ்வொரு தமிழர்களையும் பெருமைப்படுத்தும், ஒவ்வொருவரும் ஆவலாக எதிர்பார்க்கும் ஒரு சிறந்த நிகழ்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அனைத்து மட்டங்களிலும் உள்ள அரசியல் தலைவர்களும் கூட தமிழர் தெருவிழாவிற்கு அவர்களாகவே விரும்பி வருகை தந்து சிறப்பித்துள்ளார்கள். கனடிய பிரதமர் ஒருவர் தமிழ் விழா ஒன்றில் முதன்முறையாக கலந்துகொண்டதும் தமிழர் தெருவிழாவிலேயே ஆகும்.
நாம் கனடிய மண்ணில் தமிழர்களாக நாகரீகத்துடனும், ஒழுக்கத்துடனும் பெருமைக்குரிய ஒரு சமூகமாக வளர்ந்துள்ளோம். எமது கலைகளையும், பண்பாட்டையும், வரலாற்றையும், உணவுப்பழக்கங்களையும் பெருமையாக கொண்டாடும் தமிழர் தெருவிழா தலைமுறைகள் தாண்டியும் கொண்டாடப்பட வேண்டியது. தமிழர் தெருவிழாவை அதே பெருமையுடன் அடுத்த தலைமுறையினருக்கு கையளித்து செல்லவேண்டிய பொறுப்பு தமிழர்களாக எங்கள் அனைவருக்கும் உண்டு. இந்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழர் தெருவிழாவிற்கு உங்கள் அனைவரது ஆதரவையும் எதிர்பார்க்கின்றோம். தமிழர் தெருவிழா கனடாவில் உள்ள அனைத்து தமிழர்களினதும் பெருவிழா. தமிழர் தெருவிழாவை இந்த ஆண்டு மிக சிறப்பாக நடத்த அனைவரையும் ஒன்றிணைந்து தோள்கொடுக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.

மேலதிக விபரங்களுக்கு : info@canadiantamilcongress.ca / 416-240-0078

Subscribe to our newsletter