தமிழர் தெருவிழா 2025 இரத்துசெய்யப்பட்டுள்ளது.
6 ஆகஸ்ட் 2025
தமிழர் தெருவிழா 2025 இரத்துசெய்யப்பட்டுள்ளது.
தமிழர் தெருவிழா என்பது கனடிய தமிழர்களின் பெருமையாக ஒரு குறுகிய காலத்திற்குள் வளர்ந்துள்ள உலகின் மிகப்பெரிய தமிழர் திருவிழாவாகும். ஆண்டுதோறும் மிகச்சிறப்பாகவும் பெருமையுடன் நாம் அனைவரும் ஒன்றாக இந்த கோடைத்தெருவிழாவை பல்லின மக்கள் வாழுகின்ற ஒரு தேசத்தில் நிகழ்த்தி வந்துள்ளோம். மிகவும் சில சமூகங்களுக்கே இவ்வாறு பிரதான வீதியொன்றில் தமது கலைகளை, பண்பாட்டை பிரதிபலித்து விழா நடாத்த அனுமதி வழங்கப்படுகின்றது. அந்த வகையில் தமிழர்களுக்கான விழாவாக தமிழர் தெருவிழா காணப்படுகின்றதுடன் இதை சிறப்பாக நடத்த வேண்டிய பொறுப்பு அனைத்து தமிழர்களுக்கும் உண்டு.
ஆனால், கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழர் தெருவிழாவின்போது ஏற்பட்ட ஒழுக்கமின்மையான செயற்பாடுகள், பயமுறுத்தல்கள், வன்முறை சம்பவங்கள் காரணமாக இந்த ஆண்டு தமிழர் தெருவிழாவிற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க மாநகர சபையும், போலீஸ் பிரிவும் கோரியுள்ளன. குறிப்பாக, போலீஸ் பாதுகாப்பை கடந்த ஆண்டை விட நான்கு மடங்கு அதிகரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழர் தெருவிழா என்பது ஒரு இலாப நோக்கற்ற தமிழர் விழா ஆகும். கனடாவில் இவ்வாறான நிகழ்ச்சிகளுக்கான போலீஸ் பாதுகாப்பு செலவுகள் ஒருங்கிணைப்பாளர்களால் கட்டணம் செலுத்தப்பட்டு பெறப்படவேண்டியவை. இந்த ஆண்டு கேட்கப்பட்ட பாதுகாப்பு செலவுகள், விழாவிற்காக திட்டமிடப்பட்ட மொத்த செலவுகளில் நான்கில் ஒரு பங்காக காணப்படுகிறது. இது தமிழர் தெருவிழாவை நடத்துவதற்கு தடையாக உள்ளது.
இவ்வாண்டு தமிழர் தெருவிழாவை அமைதியுடனும், ஒற்றுமையுடனும் நடாத்தும் நோக்கில், கடந்த ஆண்டு புறக்கணிப்பை பகிரங்கமாக கோரிய கனடிய தமிழர் தேசிய அவை (National Council of Canadian Tamils – மக்கள் அவை), மற்றும் கனேடிய தமிழர் கூட்டு (Canadian Tamil collective) என்ற குழுவுடனும் கனடிய தமிழர் பேரவை நேரடி சந்திப்புக்கள் மூலமாகவும், மத்தியஸ்தர்களின் ஈடுபாட்டுடனும் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தது. இதன்போது தமிழர் தெருவிழா தமிழர்களான நமக்கு மிகவும் முக்கியமான ஒரு நிகழ்வு என்பதையும், இதனை எமது அடுத்த தலைமுறையினருக்கு இதே பெருமையுடன் கையளிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் கனடிய தமிழர் பேரவை வலியுறுத்தியிருந்தது. இந்த ஆண்டு தமிழர் தெருவிழாவை சிறப்பாக நடத்தவும் சென்ற ஆண்டைப்போல எந்த வன்முறைக்கும் இடமளிக்கக்கூடாது என்ற எண்ணத்திலும் புறக்கணிப்பை மீளப்பெற்றுக்கொள்ளுமாறும் குறித்த அமைப்புக்களிடம் கேட்டிருந்தோம். அதற்காக அவர்களது நியாயமான கோரிக்கைகளையும், நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்வதென்று எழுத்து மூலமாக உறுதியளித்திருந்தோம். ஆனால் அவர்களின் பிரதான கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படுவதாக தெரியப்படுத்தப்பட்ட பின்னரும்; அதற்கும் அப்பால் பல புதிய நியாயமற்ற நிபந்தனைகளை முன்வைத்திருந்தனர். கனடியத் தமிழர் பேரவையின் சுயாதீனத் தீர்மானங்களில் தலையிடும் வகையிலும் ஒரு பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தின் இறையாண்மையை மீறும் வகையிலும் அவர்களின் புதிய கோரிக்கைகள் அமைந்திருந்தமையை அவர்களுக்கு சுட்டிக்காட்டியிருந்தோம். அத்துடன் தமிழர் தெருவிழாவை புறக்கணிக்கும் பகிரங்க அழைப்பினை மீளப் பெறுமாறு நாம் பல தடவைகள் முன்வைத்த கோரிக்கையினை அவர்கள் ஏற்றுக் கொள்ளத் தவறியதோடு எம்முடனான தொடர்பாடல்களையும் நிறுத்திக் கொண்டனர்.
இவ்வாறான நிலையில் தமிழர் தெருவிழாவை இரத்துச் செய்யும் தீர்மானத்தை நாம் எடுக்க வேண்டிய நிலையை அவர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.
தமிழர்களாக எமது அடையாளங்களை மிகவும் நாகரீகமான முறையில் இந்த தேசத்தில் நாம் வளர்த்து வந்துள்ளோம். அந்த நிலையில் தமிழர் தெருவிழா போன்ற பிரம்மாண்டமான தமிழர்களின் நிகழ்ச்சியொன்றில் வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டுவிட்டாலோ, ஒழுக்கமற்ற, அடிப்படை அறம் தவறிய செயற்பாடுகள் இடம்பெற்றாலோ அது ஒரு சமூகமாக எம் அனைவருக்குமே இழுக்காக அமையும். பல மொழிகளை பேசுகின்ற, பல நாடுகளை சேர்ந்த, பல்லின மக்கள் வாழ்கின்ற கனடிய மண்ணில் நமக்குள் இருக்கும் கருத்து முரண்பாடுகளை ஒழுக்கமற்ற முறையில் பொதுவெளியில் வெளிப்படுத்துவதும் தமிழர்களாக எமக்கு ஆரோக்கியமானதல்ல. ஒரு சமூகமாக எமது நற்பெயரை காக்கும் நோக்கிலும், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாநகரசபை விதித்துள்ள நிபந்தனைகளை உணர்ந்தவாறும், இந்த ஆண்டு தமிழர் தெருவிழாவை இரத்து செய்யும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
எமது தீர்மானத்தினால் எமது சமூகத்தில் பலத்த ஏமாற்றம் உருவாகலாம் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இந்த முடிவு மிகவும் சிந்தித்து பலதரப்பட்ட ஆலோசனைகளுக்கு பிறகே எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம். தமிழர்களாகிய நாம் உயர்வாக பார்க்கப்பட்ட இடத்தில் தாழ்ந்து நிற்கும் நிலையை தவிர்க்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழர் தெருவிழா தமிழர்களுக்கு மிகவும் முக்கியமான ஒரு நிகழ்வு என்பதை தெரிந்திருந்தும், சென்ற ஆண்டின் புறக்கணிப்பு பிரச்சாரங்களால் பொது வெளியில் வன்முறைகளும், குழப்பங்களும் ஏற்பட்டிருந்ததை அறிந்திருந்தும் இந்த ஆண்டும் அதே செயற்பாடுகளில் ஈடுபட்டு வருபவர்களே தமிழர் தெருவிழாவை இந்த ஆண்டு இரத்துசெய்ததற்கான முழுமையான பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
எங்களுக்கு இத்தனை ஆண்டுகளாக ஆதரவு நல்கிய அனைத்து தமிழ் உறவுகளுக்கும், தன்னார்வ தொண்டர்களுக்கும், வர்த்தகர்களுக்கும், கலைஞர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
மேலதிக விபரங்களுக்கு : info@canadiantamilcongress.ca / 416-240-0078

